22
ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.
23
அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் கொடியவர்: இரக்கமற்றவர்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே சீயோன்! அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்: சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்:
24
“அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின: கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம்.
25
வயல்வெளிக்குப் போகவேண்டாம்: சாலைகளில் செல்ல வேண்டாம்: ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது: சுற்றிலும் ஒரே திகில்.
26
மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்: சாம்பலில் புரளுங்கள்: இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான்.”