13
ஆண்டவரின் இல்லத்தையும் அரச அரண்மனையையும் எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் அவன் தீக்கிரையாக்கினான்: பெரிய வீடுகளை எல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினான்.
14
மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்து கல்தேயப் படையினர் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை எல்லாம் தகர்த்தெறிந்தனர்.
15
மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான் ஏழை மக்களுள் சிலரையும், நகரில் எஞ்கியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான்.
16
ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.
17
ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத் தூண்களையும் தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தை எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.
18
சாம்பல்சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், பலிக் கிண்ணங்கள், தூபக்கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்டவெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.
19
மேலும் பொன், வெள்ளியாலான கிண்ணங்கள், நெருப்புச் சட்டிகள், பலிக்கிண்ணங்கள், சாம்பல் சட்டிகள், விளக்குத் தண்டுகள், தூபக்கலசங்கள், நீர்மப்படையல் கிண்ணங்கள ஆகிய எல்லாவற்றையும் மெய்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான்.
20
சாலமோன் அரசர் ஆண்டவர் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக் கடல், அதன் அடியில் இருந்த பன்னிரு வெண்கலக் காளைகள், தள்ளுவண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்து மாளாது.
21
தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்: சுற்றளவு பன்னிரண்டு முழம்: வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது.
22
தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. மாதுளம்பழ வடிவங்கள் கொண்ட மறு தூணும் அவ்வாறே செய்யப்பட்டிருந்தது.
23
வலைப் பின்னலைச் சுற்றிலும் அமைக்கப் பெற்றிருந்த மொத்தம் நூறு மாதுளம் பழ வடிவங்களுள், தொண்ணூற்றாறு பக்கவாட்டில் தெரிந்தன.