எரேமியா 51:35-58 - WCV
35
“எனக்கும் என் உறவினர்க்கும் இழைக்கப்பட்ட கொடுமை பாபிலோன் மேல் வரட்டும்” என்று சீயோன் குடிகள் கூறட்டும்: “என் இரத்தப் பழி கல்தேயக் குடிகள்மீது வந்துவிழட்டும்,” என்று எருசலேம் சொல்லட்டும்.
36
எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே உனக்காக வழக்காடுவேன்: உன் பொருட்டுப் பழிவாங்குவேன்: அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்: அதன் நீரூற்றுகள் காய்ந்துபோகச் செய்வேன்.
37
பாபிலோன் பாழ்மேடு ஆகும்: குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும். அது குடியிருப்பாரற்றுப் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் உள்ளாகும்.
38
அவர்கள் சிங்கங்களைப்போல் சேர்ந்து கர்ச்சிப்பார்கள்: சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.
39
அவர்கள் கொதித்தெழுந்தபொழுது நான் அவர்களுக்கு விருந்து அளிப்பேன்: அவர்கள் மயங்கி மகிழுமாறு போதையுறும்வரை குடிக்கச் செய்வேன்: அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்: துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
40
செம்மறிக்குட்டிகள், ஆட்டுக்கிடாய்கள், வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று, நான் அவர்களைக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோவேன்.
41
சேசாக்கு இப்படிப் பிடிபட்டுப் போயிற்றே! மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம் இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு?
42
கடலானது பாபிலோன்மீது கொந்தளித்து வந்துள்ளது: ஆர்ப்பரிக்கும் அலைகளால் அது மூடப்பட்டுவிட்டது.
43
அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன: அது வறண்ட பாலைநிலமாய் மாறிவிட்டது: அந்நாட்டில் குடியிருப்போர் யாரும் இல்லை: எவரும் அதனைக் கடந்து செல்லமாட்டார்.
44
நான் பாபிலோனில் பேலைத் தண்டிப்பேன்: அது விழுங்கினதை அதன் வாயினின்று கக்கச்செய்வேன்: மக்களினங்கள் இனி ஒருபோதும் அங்குக் செல்லமாட்டா: பாபிலோன் மதிலும் தரைமட்டமாக்கப்படும்.
45
என் மக்களே, அதனின்று வெளியேறுங்கள்: ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று ஒவ்வொருவனும் தன் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்.
46
உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்: நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக் கலங்காதீர்கள்: ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்: மறு ஆண்டில் மற்றொரு வதந்தி உருவெடுக்கும்: நாட்டில் வன்முறை மலியும்: ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய் எழுவான்.
47
எனவே நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன். அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்: கொலையுண்டோர் அனைவரும் அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.
48
விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும் பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்: வடக்கினின்று “அழிப்போர்” அதை எதிர்த்து வருவர், என்கிறார் ஆண்டவர்.
49
பாபிலோனை முன்னிட்டு மண்ணுலகு எங்கும் மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்: இஸ்ரயேலில் கொலையுண்டோரை முன்னிட்டு இப்போது பாபிலோன் வீழ்ச்சியுற வேண்டும்.
50
வாளுக்குத் தப்பியவர்களே, போய்விடுங்கள், நிற்காதீர்கள்: தொலையிலிருந்து ஆண்டவரை நினைவுகூருங்கள்: உங்கள் இதயத்தில் எருசலேம் இடம்பெறட்டும்.
51
பழிமொழி கேட்டதால் நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்: ஆண்டவரது இல்லத்தின் திருஇடங்களுக்குள் அன்னியர் நுழைந்துவிட்டதால், மானக்கேடு எங்கள் முகங்களை மூடிக்கொண்டது.
52
ஆகவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். நான் அதன் சிலைகளைத் தண்டிப்பேன்: அந்நாடு எங்கணும் காயம்பட்டோர் குமுறியழுவர்.
53
பாபிலோன் வானம்வரை தன்னை உயர்த்திக் கொண்டாலும், தன் உயர்ந்த கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்திக் கொண்டாலும், அழிப்போரை நான் அதன் மீது அனுப்புவேன், என்கிறார் ஆண்டவர்.
54
பாபிலோனிலிருந்து கூக்குரல் கேட்கிறது: கல்தேயரின் நாட்டிலிருந்து பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.
55
ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்: அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார்: அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம்போல் முழங்கும். அவர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்வர்.
56
“அழிப்போன்” பாபிலோன் மீதே வந்துவிட்டான். அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் அம்புகள் முறித்தெறியப்பட்டன. ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்: அவர் திண்ணமாய்ப் பதிலடி கொடுப்பார்.
57
அதன் தலைவர்கள், ஞானிகள், ஆளுநர்கள், படைத்தலைவர்கள், படைவீரர்கள் ஆகிய எல்லாரையும் நான் குடிவெறி கொள்ளச்செய்வேன். அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்: துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் “படைகளின் ஆண்டவர்” என்னும் பெயர் கொண்ட மன்னர்.
58
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனின் அகன்ற மதில்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்: அதன் உயர்ந்த வாயில்கள் தீக்கிரையாகும்: மக்களின் உழைப்பு வீணாகும்: மக்களினங்களின் முயற்சிகள் தீயோடு தீயாகும்.