1
ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனுக்கும் கல்தேயாவின் குடிமகளுக்கும் எதிராக அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.
2
புடைப்போரைப் பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்: அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்: தண்டனை நாளில் அவர்கள் எப்பக்கத்தினின்றும் அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்: அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.
3
வில்வீரன் வில்லை நாணேற்ற விடாதீர்கள்! தன் கவசத்தை அணிந்து நிற்க விடாதீர்கள்! அதன் இளைஞர்கள் யாரையும் விட்டுவைக்காதீர்கள்: அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
4
கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில் வீழ்ந்து கிடப்பர். காயமடைந்தோர் அதன் தெருக்களில் கிடப்பர்.