எரேமியா 51:1-14 - WCV
1
ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனுக்கும் கல்தேயாவின் குடிமகளுக்கும் எதிராக அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.
2
புடைப்போரைப் பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்: அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்: தண்டனை நாளில் அவர்கள் எப்பக்கத்தினின்றும் அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்: அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.
3
வில்வீரன் வில்லை நாணேற்ற விடாதீர்கள்! தன் கவசத்தை அணிந்து நிற்க விடாதீர்கள்! அதன் இளைஞர்கள் யாரையும் விட்டுவைக்காதீர்கள்: அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
4
கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில் வீழ்ந்து கிடப்பர். காயமடைந்தோர் அதன் தெருக்களில் கிடப்பர்.
5
தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இஸ்ரயேலையும் யூதாவையும் கைவிட்டுவிடவில்லை. இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக் கல்தேயரின் நாடு குற்றங்களால் நிறைந்துள்ளது.
6
பாபிலோன் நடுவினின்று தப்பியோடுங்கள்: ஒவ்வொருவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்: அதன் குற்றகளுக்காக நீங்கள் அழிந்து போகாதீர்கள்: இது ஆண்டவர் பழிவாங்கும் காலம், அவரே அதற்குத் தகுந்த தண்டனை வழங்குவார்:
7
பாபிலோன் ஆண்டவரின் கையில் பொற்கிண்ணம்போல் இருந்தது: அது மண்ணுலகு முழுவதற்கும் போதை ஊட்டியது: மக்களினங்கள் அதன் திராட்சை இரசத்தைப் பருகின: நாடுகள் வெறிகொண்டன.
8
பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கிற்று: அதற்காகப் புலம்பியழுங்கள்: அதன் காயத்துக்கு மருந்து கொண்டு வாருங்கள்: ஒருவேளை அது நலம் பெறலாம்!
9
நாங்கள் பாபிலோனைக் குணப்படுத்த முயன்றோம்: அதுவோ நலம் அடைவதாயில்லை! அதைக் கைவிட்டுவிடுங்கள்: நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்: பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு விண்ணுலகை எட்டியுள்ளது: அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.
10
ஆண்டவர் நமக்கு நீதி வழங்கியுள்ளார்: வாருங்கள்! நம் கடவுளான ஆண்டவரின் செயலைச் சீயோனில் பறைசாற்றுவோம்.
11
அம்புகளைக் கூர்மையாக்குங்கள்: கேடயங்களைக் கையிலெடுங்கள்: ஆண்டவர் மேதிய அரசர்களைக் கிளர்ந்தெழச் செய்துள்ளார்: பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்: இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு ஆண்டவர் பழிவாங்குவார்.
12
பாபிலோன் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள்: காவலை வலுப்படுத்துங்கள்: இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்: கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்: பாபிலோனின் குடிகளுக்கு எதிராக ஆண்டவர் உரைத்திருந்ததைத் தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.
13
நீர்வளம் கொண்டனே! செல்வம் மிகுந்தவனே! உனக்கு முடிவு வந்துவிட்டது: உன் வாழ்நாளின் இழை துண்டிக்கப்பட்டுவிட்டது.
14
வெட்டுக்கிளிகளைப் போன்று எண்ணற்ற மனிதரால் உன்னைத் திண்ணமாய் நிரப்புவேன்: அவர்கள் உனக்கு எதிராக வெற்றி முழக்கம் செய்வார்கள், என்று படைகளின் ஆண்டவர் தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.