எரேமியா 50:35-42 - WCV
35
கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும் ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.
36
குறிசொல்வோர் மேல் வாள் வரும்: அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்: அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்: அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
37
அதன் குதிரைகள்மேலும், தேர்கள் மேலும் அதன் நடுவே இருக்கும் கூலிப் படைகள்மேலும் வாள் வரும்: அவர்கள் பேடிகள் ஆவார்கள்: அதன் செல்வங்கள் அனைத்தின் மேலும் வாள் வரும்: அவை கொள்ளையடிக்கப்படும்.
38
அதன் நீர்நிலைகள் மேல் வாள் வரும்: அவை வறண்டுபோகும்: அது சிலைகள் மலிந்த நாடு: அதன் மக்கள் சிலைப் பைத்தியங்கள்.
39
எனவே பாபிலோனின் காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளோடு வாழும்: தீக்கோழிகள் அங்குக் குடியிருக்கும். மக்கள் என்றுமே அங்குக் குடியேறப்போவதில்லை: காலமெல்லாம் அது குடியிருப்பாரற்றுக் கிடக்கும்.
40
கடவுள் சோதோம், கொமோராவையும் அவற்றின் அண்டை நகர்களையும் வீழ்த்தியபொழுது நிகழ்ந்ததுபோல், அங்கு எவரும் குடியிருக்க மாட்டார்: எவரும் தங்கவுமாட்டார், என்கிறார் ஆண்டவர்.
41
இதோ! வடக்கினின்று ஓர் இனம் வருகின்றது: வலிமை வாய்ந்த மக்களினமும் மன்னர் பலரும் மண்ணுலகின் கடை எல்லைகளினின்று கிளர்ந்தெழுகின்றனர்.
42
அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் இரக்கமற்ற அரக்கர்கள்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே பாபிலோன்! அவர்கள் போருக்கு அணி வகுத்துக் குதிரைகள்மீது சவாரி செய்து கொண்டு உனக்கு எதிராய் வருகின்றார்கள்.