எரேமியா 50:29-35 - WCV
29
வில்லாளர்கள், வில்வீரர்கள் அனைவரும் பாபிலோனுக்கு எதிராக வருமாறு அழையுங்கள்: அதை சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள். ஒருவனும் தப்பியோட விடாதீர்கள்: அதன் செயல்களுக்குத் தக்கவாறு கைம்மாறு செய்யுங்கள்: அது நடந்து கொண்டதற்கு ஏற்ப அதை நடத்துங்கள்: ஏனெனில், இஸ்ரயேலின் தூயவராகிய ஆண்டவருக்கு எதிராக அது இறுமாப்புடன் நடந்து கொண்டது.
30
எனவே அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்: அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
31
இறுமாப்புக் கொண்டவனே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர். உனது நாள் வந்துவிட்டது: உன்னை நான் தண்டிக்கும் காலம் நெருங்கி விட்டது.
32
இறுமாப்புக் கொண்டவன் இடறிக் கீழே விழுவான்: அவனைத் தூக்கிவிட யாரும் இலர்: அவன் நகர்களில் நான் தீ வைப்பேன்: சுற்றிலும் உள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.
33
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்: யூதாவின் மக்களும் அவர்களோடு சேர்ந்து துன்புறுத்தப் படுகிறார்கள். அவர்களை அடிமைப் படுத்தியோர் அனைவரும் அவர்களைக் காவலில் வைத்திருக்கிறார்கள்: அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்:
34
அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்: “படைகளின் ஆண்டவர்” என்பதுஅவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்: நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்: பாபிலோன் குடிமக்களுக்கோ அமைதியின்மையை அளிப்பார்.
35
கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும் ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.