10
கல்தேயா சூறையாடப்படும்: அதைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.
11
என் உரிமைச் சொத்தைச் சூறையாடியவர்களே, நீங்கள் அக்களித்தாலும், அகமகிழ்ந்தாலும், புல்கண்ட இளம்பசுபோல் துள்ளிக் குதித்தாலும், பொலிகுதிரைப்போலக் கனைத்தாலும்,
12
உங்கள் அன்னை பெரும் அவமானத்துக்கு உள்ளாவாள்: உங்களை ஈன்றெடுத்தவள் இகழ்ச்சிக்கு ஆளாவாள்: மக்களுள் அவளே கடையளாய் இருப்பாள்: வறண்ட, வெறுமையான பாலைநிலம் ஆவாள்.
13
ஆண்டவருடைய வெஞ்சினத்தால் அது குடியற்றுப்போகும்: முற்றிலும் பாழடைந்துபோகும்: பாபிலோனைக் கடந்து செல்லும் எவனும் அதிர்ச்சி அடைவான்: அதன் தோல்வி கண்டு ஏளனம் செய்வான்.
14
வில்வீரர்களே, நீங்கள் அனைவரும் பாபிலோனுக்கு எதிராக எப்பக்கமும் அணிவகுத்து வாருங்கள். அதன்மீது அம்பு எய்யுங்கள், அம்பு மாரி பொழியுங்கள்: அது ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துள்ளது.
15
எப்பக்கமும் அதற்கு எதிராகக் குரல் எழுப்புங்கள். அது சரணடைந்துவிட்டது. அதன்கொத்தளங்கள் வீழ்ந்தன: அதன் மதில்கள் தகர்ந்தன. இது ஆண்டவரின் பழிவாங்குதல் ஆகும். நீங்களும் அதனைப் பழிவாங்குங்கள்: அது செய்ததுபோல் நீங்கள் அதற்குச் செய்யுங்கள்.