1
நீதியைக் கடைப்பிடித்து உண்மையை நாடும் ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முடியுமாவென எருசலேமின் தெருக்களில் சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்: அவளுடைய பொது இடங்களில் கவனமாய்த் தேடிப்பார்: கண்டுபிடித்தால், அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.
2
வாழும் ஆண்டவர் மேல் அவர்கள் ஆணையிடலாம்: ஆனால் அது பொய்யாணையே.
3
ஆண்டவரே, உம் கண்கள் பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன! நீர் அவர்களை நொறுக்கினீர்: அவர்களோ வேதனையை உணரவில்லை: நீர் அவர்களை அழித்தீர்: அவர்களோ திருந்த மறுத்தனர்: அவர்கள் தங்கள் முகத்தைப் பாறையினும் கடியதாக இறுக்கிக்கொண்டனர்.
4
நான் 'அவர்கள் தாழ்நிலையில் உள்ளவர்கள்: அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்' என எண்ணினேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறியாதிருக்கின்றார்கள்.
5
நான் உயர் நிலையில் உள்ளவர்களிடம் போய், அவர்களிடம் பேசுவேன். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறிந்தவர்களாய் இருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்களும் நுகத்தை முறித்தார்கள்: தளைகளை அறுத்தார்கள்.