எரேமியா 49:7-22 - WCV
7
ஏதோமைக் குறித்து, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா? மதி நுட்பமுடையோரிடமிருந்து அறிவுரை ஒழிந்துபோயிற்றா? அவர்களின் ஞானம் மறைந்து போயிற்றா?
8
தெதோன் குடிமக்களே, திரும்புங்கள், தப்பியோடுங்கள்: பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்: நான் ஏசாவைத் தண்டிக்கும் அவனது காலத்தில் அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.
9
திராட்சைப் பழம் பறிப்போர் உன்னிடம் வந்தால், விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ? இரவில் திருடர் வருவாராயின், தேவைக்குமேல் திருடமாட்டார் அன்றோ?
10
நானோ ஏசாவை வெறுமையாக்கிவிட்டேன்: அவனுடைய பதுங்கிடங்களை வெளிப்படுத்திவிட்டேன். இனி அவனால் மறைந்திருக்க முடியாது. அவன் வழிமரபினர், சகோதரர், அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்: அவன் முற்றிலும் அழிந்து போவான்.
11
அனாதைகளைப்பற்றிக் கவலை கொள்ளாதே. நான் அவர்களை வாழவைப்பேன். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.
12
ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்: நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய்.
13
ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்: அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.
14
நான் ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி கேட்டேன். “ஒன்றுகூடுங்கள், அதனை எதிர்க்க வாருங்கள், போருக்குப் புறப்படுங்கள்” என்று சொல்லுமாறு, மக்களினத்தார்க்கு ஒரு தூதன் அனுப்பப்பட்டுள்ளான்.
15
பார்! மக்களினத்தாருள் உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்: மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.
16
பாறை இடுக்குகளில் வாழ்பவனே, குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே, நீ விளைவித்த அச்சமும் உன் உள்ளத்தின் இறுமாப்பும் உன்னை ஏமாற்றிவிட்டன: நீ கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் கட்டினாலும், நான் உன்னை அங்கிருந்து கீழே தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.
17
ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்: அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான்.
18
சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்: எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர்.
19
யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்: நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்?
20
எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்: மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்: ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
21
அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்: அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
22
இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்: போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.