எரேமியா 49:28-33 - WCV
28
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வீழ்த்திய கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி, ஆண்டவர் கூறுவது இதுவே: புறப்படுங்கள், கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்: கீழ்த்திசை மக்களை அழித்தொழியுங்கள்.
29
அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிபடும்: கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப் பொருள்களும் கைப்பற்றப்படும்: அவர்களின் ஒட்டகங்களை அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்: “எப்பக்கமும் ஒரே திகில்” என மனிதர் ஓலமிடுவர்.
30
ஆட்சோரின் குடிமக்களே! தப்பியோடுங்கள், தூரமாகச் சென்று பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியுள்ளான்: உங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்துள்ளான்.
31
புறப்படுங்கள்: கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும் மக்களினத்தார்க்கு எதிராக-தனித்து வாழும் மக்களினத்தார்க்கு எதிராக முன்னேறிச் செல்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.
32
அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும்: அவர்களின் எண்ணற்ற மந்தைகள் பறிமுதலாகும்: முன்தலையை மழித்துக்கொள்ளும் பறக்கவிடுவேன்: எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல் அழிவைக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.
33
ஆட்சோர், குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்: என்றும் பாழடைந்து கிடக்கும்: அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்: எவரும் அதில் தங்கவும் மாட்டார்.