எரேமியா 49:17-22 - WCV
17
ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்: அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான்.
18
சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்: எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர்.
19
யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்: நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்?
20
எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்: மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்: ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
21
அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்: அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
22
இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்: போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.