1
அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா? அதற்கு வழிமரபே கிடையாதா? மில்க்கோம் காத்தைக் கைப்பற்றியது ஏன்? அவன் மக்கள் அதன் நகர்களில் குடியிருப்பது ஏன்?
2
இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப் போர்முரசு ஒலிக்கச் செய்வேன். அது பாழடைந்த குவியல் ஆகும்: அதன் ஊர்கள் தீக்கிரையாகும்: தன்னைக் கைப்பற்றியோரை இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும், என்கிறார் ஆண்டவர்.
3
எஸ்போனே, புலம்பியழு: ஆயி பாழடைந்துவிட்டது. இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்: சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்: ஒப்பாரி வையுங்கள்: மதில்களுக்கிடையே அங்குமிங்கும் ஓடுங்கள்: மில்கோம் நாடுகடத்தப்படுவான். அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அவனோடு செல்வார்கள்.
4
பற்றுறுதியற்ற மகளே, உன் பள்ளத்தாக்குகள் பற்றி, உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி, பெருமையடிப்பானேன்? உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்கிறாய்: 'எனக்கு எதிராய் எவன் வருவான்?' எனச் சொல்லிக்கொள்கின்றாய்.
5
உன்னைச் சுற்றியிருப்போர் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் வருவிப்பேன், என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர். நீங்கள் எல்லாரும் தலை தெறிக்க ஓடுமாறு விரட்டியடிக்கப்படுவீர்கள்: தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க எவரும் இரார்.
6
பின்னர், அம்மோனியரின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.