9
மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்: அது பறந்தோடட்டும்: அதன் நகர்கள் பாழாக்கப்படும்: அவை குடியிருப்போர் அற்றுப் போகும்.
10
ஆண்டவர்தம் அலுவலை அக்கறையின்றிச் செய்பவன் சபிக்கப்பட்டவன்: குருதி சிந்தாமல் தன் வாளை வைத்திருப்பவனும் சபிக்கப்பட்டவனே.
11
மோவாபு இளமைமுதல் அமைதியில் வாழ்ந்துவருகிறது: மண்டியை அடியில் கொண்ட பழந் திராட்சை இரசம் அது. அது கலத்தினின்று கலத்திற்கு மாற்றப்படாதது: நாடுகடத்தப்படாதது: அதன் சுவை குன்றவில்லை: அதன் நறுமணம் மாறவில்லை.
12
எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் “கவிழ்ப்போரை” அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்: அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்: அதன் சாடிகளை நொறுக்குவார்கள்.
13
இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.
14
“நாங்கள் படைவீரர்கள்: போரில் வல்லவர்கள்” என்று நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?
15
“மோவாபையும் அதன் நகர்களையும் அழிப்பவன் வந்துவிட்டான்: அதன் சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்திற்குப் போய் விட்டார்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர்.
16
மோவாபின் அழிவு அண்மையில் உள்ளது: தீங்கு அதை நோக்கி விரைந்து வருகிறது.
17
அதைச் சுற்றியிருப்போரே, நீங்கள் அனைவரும் அதற்காகத் துக்கம் கொண்டாடுங்கள். அதன் புகழை அறிந்திருப்போரே, நீங்கள் அனைவரும் “வலிமைமிக்க செய்கோல் முறிந்தது எங்ஙனம்? மேன்மைமிக்க கோல் உடைந்தது எவ்வாறு?” என்று கேளுங்கள்.
18
மகள் தீபோனின் குடிமகனே, உன் மேன்மையை விட்டு இறங்கி வா: வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள். மோவாபை அழிப்பவன் உனக்கு எதிராக எழுந்துவிட்டான்: உன் கோட்டைகளை அவன் தகர்த்து விட்டான்.
19
அரோயேரின் குடிமகனே! நீ சாலை ஓரமாய் நின்று கவனி: ஓட்டம்பிடிக்கிறவனையும் தப்பி ஓடுகிறவளையும் நோக்கி, “என்ன நடந்தது?” என்று கேள்.
20
மோவாபு அழிக்கப்பட்டுச் சிறுமைக்குள்ளானது: அழுது புலம்புங்கள்: கூக்குரலிடுங்கள்: மோவாபு பாழடைந்துவிட்டது என அர்னோனில் அறிவியுங்கள்.
21
சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது: ஓலோன், யாகுசா, மேப்பாத்து,
22
தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம்,
23
கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன்,
24
கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது.
25
மோவாபின் கொம்பு முறிந்து விட்டது: அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.