1
மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நெபோவுக்கு ஐயோ கேடு! அது பாழடைந்து கிடக்கிறது. கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
2
போவாபின் புகழ் மங்கிவிட்டது: எஸ்போனில் அதற்குத் தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது: “வாருங்கள்: அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்”. மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்: வாள் உன்னைத் துரத்தி வரும்.
3
ஓரொனாயிமினின்று கூக்குரல் ஒலிக்கிறது. 'கொடுமை பேரழிவு' எனக் கேட்கிறது.
4
மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது: அதன் குழந்தைகளின் அழுகுரல் கேட்கின்றது.
5
லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில் அவர்கள் அழுதுகொண்டே போகிறார்கள்: ஓரொனாயிமுக்கு இறங்கிச் செல்லும் வழியில் அழிவின் புலம்பல் கேட்கிறது.