எரேமியா 46:13-26 - WCV
13
பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி, ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:
14
எகிப்தில் அறிவியுங்கள்: மிக்தோலில் பறைசாற்றுங்கள்: மெம்பிசிலும் தகபனகேசிலும் முரசறையுங்கள்: அணிவகுத்து நில்: தயாராய் இரு! உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும்.
15
உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்? அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்? ஆண்டவர் அவனைத் தள்ளிவிட்டதால் அன்றோ!
16
அவர் பலரை இடறிவிழச் செய்தார். “எழுந்திருங்கள், கொடுங்கோலன் வாளினின்று தப்பிப்போம்: நம் சொந்த மக்களிடம் நம் தாய் நாட்டுக்கே திரும்பிச் செல்வோம்” என்று ஒருவர் மற்றவரிடம சொல்லிக்கொண்டனர்.
17
“வாய்ப்பை நழுவவிடும் வாயாடி” என்று எகிப்திய மன்னன் பார்வோனுக்குப் பெயர் சூட்டுங்கள்.
18
படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறுகிறார்: வாழும் என் மேல் ஆணை! மலைகளுக்குள் தாபோர் போலவும் கடலோரத்துக் கர்மேல் போலவும் ஒருவன் ஆற்றலுடன் வருவான்.
19
மகன் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென மூட்டை கட்டிக்கொள்: மெம்பிசு அழிந்துபோகும்: குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்.
20
எகிப்து ஓர் அழகான இளம்பசு! வடக்கினின்று உண்ணி ஒன்று அவள்மீது வந்து அமர்ந்துள்ளது.
21
அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர் கொழுத்த கன்று போன்றவர்கள்: அவர்களும் புறமுதுகுகாட்டி ஒருமிக்க ஓடிவிட்டார்கள். அவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்களுடைய அழிவின் நாள், அவர்களது தண்டனையின் காலம் அவர்கள்மேல் வந்துற்றது.
22
நழுவிச் செல்லும் பாம்பு போன்று அவள் சீறுகின்றாள்: அவள் எதிரிகள் வலிமையோடு அணிவகுத்து வருகின்றார்கள்: மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு அவளை எதிர்த்து வருகின்றார்கள்.
23
அவளது காடு ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது. அவர்கள் அதை வெட்டுவார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட மிகுதியானவர்கள். அவர்களைக் கணக்கிட முடியாது.
24
மகள் எகிப்துக்கு இகழ்ச்சிக்கு உள்ளாவாள்: வடக்கு நாட்டு மக்களிடம் அவள் கையளிக்கப்படுவாள்.
25
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நோ நகரத்து ஆமோனையும், பார்வோனையும் எகிப்தையும் அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும், பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும் நான் தண்டிக்கப் போகிறேன்.
26
அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.