எரேமியா 44:2-17 - WCV
2
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எருசலேம் மீதும் யூதாவின் எல்லா நகர்கள் மீதும் நான் வருவித்துள்ள தண்டனையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள. இதோ, இன்று அவை பாழடைந்து குடியிருப்பாரற்றுக் கிடக்கின்றன.
3
ஏனெனில், அவர்களோ நீங்களோ உங்கள் மூதாதையரோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களை அவர்கள் நாடிச்சென்று, தூபம் காட்டி, அவற்றைத் தொழுததன் மூலம் தீச்செயல் புரிந்து எனக்குச் சினமூட்டினார்கள்.
4
இருப்பினும், நான் என் ஊழியரான இறைவாக்கினர் அனைவரையும் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி வைத்து, நான் வெறுக்கின்ற இந்த அருவருப்பான செயலைச் செய்யாதீர்கள் என்று சொல்லச் செய்திருந்தேன்.
5
அவர்களோ அதைக் கேட்கவில்லை: காதில் வாங்கிக்கொள்ளவுமில்லை. தங்கள் தீச்செயலை விட்டுத் திரும்பவில்லை: வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுவதை நிறுத்தவுமில்லை.
6
எனவே என் சீற்றமும் சினமும் யூதாவின் நகர்கள்மேலும் எருசலேமின் தெருக்கள்மேலும் மூண்டெழுந்து அவற்றைத் தீக்கிரையாக்கின. இன்று காண்பதுபோல், அவை பாழடைந்து, ஆளரவமற்றுப் போயின.
7
இப்போது இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களுள் ஒருவன் கூட எஞ்சியிராதபடி, ஆண், பெண், சிறுவர், குழந்தை ஆகிய அனைவரையும் யூதாவினின்று அழித்து விடுவதன்மூலம் நீங்கள் உங்களுக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் பார்க்கிறீர்களே, அது ஏன்?
8
நீங்கள் தங்கியிருக்க வந்துள்ள எகிப்து நாட்டில் வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுதல் போன்ற உங்கள் செயல்களால் ஏன் எனக்குச் சினமூட்டுகிறீர்கள்? நான் உங்களை அழிக்க, உலகின் எல்லா மக்களினத்தார் மத்தியிலும் நீங்கள் பழிப்புக்கும் கண்டனத்துக்கும் உள்ளவதற்கா இவ்வாறு செய்கிறீர்கள்?
9
உங்கள் மூதாதையரின் தீச்செயல்களையும், யூதா அரசர்களின் தீச்செயல்களையும், அவர்களுடைய மனைவியரின் தீச்செயல்களையும், உங்களுடைய சொந்தத் தீச்செயல்களையும் யூதா நாட்டிலும் எருசலேமின் தெருக்களிலும் உங்கள் மனைவியர் செய்த தீச்செயல்களையும் நீங்கள் மறந்துபோய் விட்டீர்களா?
10
இந்நாள் வரை அவர்கள் எனக்குப் பணிந்துபோகவில்லை: அஞ்சி நடக்கவில்லை: உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்திருந்த திருச்சட்டத்தின்படியும் நியமங்களின்படியும் ஒழுகவுமில்லை.
11
எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களுக்குத் தண்டனை அளிக்கவும், யூதா முழுவதையும் அழிக்கவும் நான் முடிவுசெய்துள்ளேன்.
12
எகிப்து நாட்டிற்கு வந்து தங்கியிருக்க முடிவுசெய்துள்ள யூதாவின் எஞ்சினோரை நான் தாக்க, அவர்கள் எல்லாரும் அழிந்து போவார்கள்: எகிப்து நாட்டில் அவர்கள் அனைவரும் வீழ்ச்சியுறுவார்கள்: வாளுக்கும் பஞ்சத்துக்கும் அவர்கள் இரையாவார்கள்: சிறியோர் முதல் பெரியோர் வரை அவர்கள் எல்லாரும் வாளாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்: சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவார்கள்.
13
எருசலேமை வாள், பஞ்சம், கொள்ளை நோயால் நான் தண்டித்துள்ளது போன்று எகிப்து நாட்டில் வாழ்வோரையும் தண்டிப்பேன்.
14
எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி வந்துள்ள யூதாவின் எஞ்சியோருள் எவருமே தப்பமாட்டார்: உயிர் பிழைக்கவும் மாட்டார். யூதா நாட்டில் குடியிருக்கும் பொருட்டு அங்குத் திரும்பிச் செல்ல ஆவலோடு ஏங்கியும் அங்குத் திரும்பிச் செல்லமாட்டார். தப்பியோடுவோரைத் தவிர வேறு எவருமே திரும்பிச் செல்லமாட்டார்.
15
அப்பொழுது, தங்கள் மனைவியர் வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டியதை அறிந்திருந்த எல்லா ஆண்களும், அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த எல்லாப் பெண்களும், எகிப்து நாட்டிலும் பத்ரோசிலும் வாழ்ந்துவந்த மக்கள் அனைவரும் எரேமியாவுக்கு மறுமொழியாகக் கூறியது:
16
“ஆண்டவர் பெயரால் எங்களுக்கு நீர் அறிவித்துள்ள செய்தியைப் பொறுத்தமட்டில் நாங்கள் உமக்குச் செவிகொடுக்கமாட்டோம்.
17
நாங்கள் செய்து கொண்ட எல்லா நேர்ச்சைகளையும் திண்ணமாய் நிறைவேற்றுவோம்: நாங்களும் எங்கள் மூதாதையரும் அரசர்களும் தலைவர்களும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் செய்துள்ளது போல, நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவோம். நீர்மப்படையல்களைப் படைப்போம். ஏனெனில், அப்பொழுது எங்களுக்கு ஏராளமான உணவு இருந்தது. நாங்கள் வளமுடன் வாழ்ந்தோம். தீமை எதுவும் எங்களை அணுகியதில்லை.