எரேமியா 44:17-27 - WCV
17
நாங்கள் செய்து கொண்ட எல்லா நேர்ச்சைகளையும் திண்ணமாய் நிறைவேற்றுவோம்: நாங்களும் எங்கள் மூதாதையரும் அரசர்களும் தலைவர்களும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் செய்துள்ளது போல, நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவோம். நீர்மப்படையல்களைப் படைப்போம். ஏனெனில், அப்பொழுது எங்களுக்கு ஏராளமான உணவு இருந்தது. நாங்கள் வளமுடன் வாழ்ந்தோம். தீமை எதுவும் எங்களை அணுகியதில்லை.
18
ஆனால், நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவதையும் நீர்மப் படையல்களைப் படைப்பதையும் நிறுத்திவிட்ட காலத்திலிருந்து, எங்களுக்கு எல்லாமே குறைபாடாய் உள்ளது. வாளாலும் பஞ்சத்தாலும் நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்.”
19
அப்பொழுது பெண்கள், “விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி, நீர்மப் படையல்களைப் படைத்தபொழுது, எங்கள் கணவர்களின் ஒப்புதல் இல்லாமலா நாங்கள் விண்ணக அரசியின் உருவம் தாங்கிய மாவடை சுட்டு, நீர்மப் படையல்கள் படைத்தோம்?” என்றார்கள்.
20
இந்த மறுமொழி கூறிய ஆண், பெண் ஆகிய எல்லா மக்களிடமும் எரேமியா கூறியது:
21
“நீங்களும் உங்கள் மூதாதையர், அரசர்கள், தலைவர்கள், நாட்டுமக்கள் எல்லாரும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் தூபம் காட்டினீர்களே, அதை ஆண்டவர் மறந்து விட்டாரா? அதை அவர் தம் நினைவில் கொள்ளவில்லையா?
22
நீங்கள் செய்துள்ள தீச்செயல்களையும் அருவருப்பான செயல்களையும் ஆண்டவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்கள் நாடு கண்டனத்திற்கும் பேரச்சத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகி, இன்று காண்பதுபோல், குடியிருப்பாரற்றுக் கிடக்கிறது.
23
நீங்கள் தூபம் காட்டியதாலும், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ததாலும், அவரது குரலுக்குச் செவிகொடாது, அவருடைய திருச்சட்டம், நியமங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றிற்கேற்ப ஒழுகாததாலுமே, இன்றும் காண்பது போல், இத்தீங்கு உங்களுக்கு நேர்ந்துள்ளது.”
24
தொடர்ந்து எரேமியா எல்லா மக்களையும் பெண்களையும் நோக்கிக் கூறியது: “எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.
25
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்களும் உங்கள் மனைவியரும், 'விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி, நீர்மப்படையல்களை அவளுக்குப் படைப்பதாக நாங்கள் செய்துகொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றியே தீருவோம்' என்று நீங்கள் சொல்லால் கூறியதைச் செயலில் நிறைவேற்றிவிட்டீர்கள். நன்று! நன்று! உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்! உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள்!
26
எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும் யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: ஆண்டவர் கூறுகிறார்: 'தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!' எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும் யூதாவின் எந்தக் குடிமகனும் என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று என் பெருமை வாய்ந்த பெயரால் நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
27
நன்மை அன்று, தீமை விளைவிக்கவே அவர்கள் மட்டில் நான் விழிப்பாய் இருக்கிறேன்: எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்கள் எல்லாரும் முற்றிலும் அழியும்வரை வாளாலும் பஞ்சத்தாலும் அவர்களை வதைப்பேன்.