11
நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் செய்திருந்த கொடுமை அனைத்தையும் பற்றிக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் அறியவந்தபொழுது,
12
அவர்கள் தங்களோடு இருந்த ஆள்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலோடு போரிடப் புறப்பட்டு, கிபயோனின் பெரிய நீர்நிலை அருகே அவனை நெருங்கினார்கள்.
13
இஸ்மயேலின் பிடியிலிருந்த மக்கள் எல்லாரும் காரயாகின் மகன் யோகனானையும் அவரோடு இருந்த படைத்தலைவர்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றார்கள்.
14
இஸ்மயேல் சிறைப்படுத்தி மிஸ்பாவிலிருந்து கூட்டிச் சென்றிருந்த மக்கள் எல்லோரும் அவனை விட்டுவிட்டுக் காரயாகின் மகன் யோகனானோடு சேர்ந்து கொண்டார்கள்.
15
ஆனால் நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் எட்டுப் பேரோடு யோகனானிடமிருந்து தப்பி, அம்மோனியரின் நாட்டுக்கு ஓடிப் போனான்.
16
நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் அகிக்காமின் மகன் கெதலியாவைக் கொன்றபின் மிஸ்பாவில் எஞ்சியிருந்தோரை-படைவீரர், பெண்டிர், சிறுவர், அரசவையோர் ஆகியோரை-சிறைப்பிடித்து இழுத்து வந்திருந்தான். இவர்களைக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் கிபயோனிலிருந்து அழைத்துவந்தார்கள்.