எரேமியா 39:1-8 - WCV
1
யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதத்தில், பாபிலோனிய மன்னன் நெபுகதனேசர் அவனுடைய எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.
2
செதேக்கியாவின் பதினொன்றாம் ஆண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது.
3
நேர்கல் சரேட்சர், சம்கூர் நெபோ, சர்செக்கிம் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பரிபலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் உள்னே புகுந்து, நடுவாயிலில் அமர்ந்தார்கள்.
4
யூதாவின் அரசன் செதேக்கியாவும் போர் வீரர் அனைவரும் அவர்களைக் கண்டவுடன் அரச பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர்.
5
ஆனால் கல்தேயப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் செதேக்கியாவைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் ரிப்லாவில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
6
பாபிலோனிய மன்னன் ரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண்முன்னே கொன்றான். மேலும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.
7
அவன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான்.
8
அரச மாளகையையும் மக்களின் வீடுகளையும் கல்தேயர் தீக்கிரையாக்கினர்: எருசலேம் மதில்களையும் தகர்த்தெறிந்தனர்.