6
எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை: சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.
7
அரண்மனையில் இருந்த அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்ற எத்தியோப்பியர் எரேமியா பாழ்ங்கிணற்றில் தள்ளப்பட்டதை அறியவந்தார். அப்பொழுது அரசன் பென்யமின் வாயிலில் அமர்ந்திருந்தான்.
8
எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி,
9
“என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்: ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார்.
10
அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, “உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு” என்று கட்டளையிட்டான்.
11
எனவே எபேது மெலேக்கு ஆள்களைத் தம்மோடு அழைத்துக் கொண்டு அரச அரண்மனையின் கருவூலத்திற்குக் கீழே சென்றார். அங்கிரந்து பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் எடுத்து, கயிற்றில் கட்டி, கிணற்றில் கிடந்த எரேமியாவிடம் இறக்கினார்.
12
எத்தியோப்பியரான எபேது மெலேக்கு எரேமியாவிடம், “இந்தப் பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் உம் அக்குள்களுக்கும் கயிற்றுக்கும் இடையே வைத்துக் கொள்ளும்” என்று வேண்டினார். எரேமியாவும் அவ்வாறே செய்தார்.
13
பின்னர் அவர்கள் எரேமியாவைக் கயிற்றால் வெளியே தூக்கினார்கள். அதன்பின் எரேமியா காவல்கூடத்தில் தங்கி இருந்தார்.