எரேமியா 38:17-23 - WCV
17
எரேமியா செதேக்கியாவிடம் கூறியது: “படைகளின் கடவுளும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உடனே பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் சரணடைந்தால், உயிர் வாழ்வீர். இந்நகர் தீக்கிரையாகாது. நீரும் உம் வீட்டாரும் பிழைத்துக்கொள்வீர்கள்.
18
பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் நீர் சரணடையாவிட்டால், இந்நகர் கல்தேயரிடம் கையளிக்கப்படும்: அவர்கள் அதைத் தீக்கிரையாக்குவார்கள். நீரோ அவர்களது கைக்ககுத் தப்பமாட்டீர்”.
19
அப்பொழுது அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, “கல்தேயரிடம் ஏற்கெனவே சரணடைந்துள்ள யூதா நாட்டவர் மட்டில் எனக்கு அச்சமாய் உள்ளது. நான் அவர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களது பழிப்புக்கு ஆளாவேன்” என்றான்.
20
அதற்கு எரேமியா, “இல்லை, நீர் கையளிக்கப்படமாட்டீர்: நான் உமக்கு எடுத்துரைக்கும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடும். அது உமக்கு நலம் பயக்கும். நீரும் உயிர் பிழைப்பீர்.
21
நீர் சரணடைய மறுப்பீராகில், இவ்வாறு நடக்குமென ஆண்டவர் எனக்குக் காட்டியுள்ளார்:
22
யூதா அரசனின் அரண்மனையில் எஞ்சியிருக்கும் பெண்கள் எல்லாரும் பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் 'நம்பிக்கைக்குரிய உம் நண்பர்கள் உம்மை வஞ்சித்து அடக்கி விட்டார்கள்: உம் கால்களைச் சேற்றில் அமிழச்செய்து உம்மைவிட்டு அகன்று போனார்கள்' எனக் கூறுவார்கள்.
23
உம் மனைவியர், மக்கள் அனைவரும் கல்தேயரிடம் கொண்டுபோகப்படுவார்கள்: நீரோ அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர். மாறாக, பாபிலோனிய மன்னனால் நீர் பிடிபடுவீர். இந்நகர் தீக்கிரையாகும்” என்றார்.