எரேமியா 36:12-19 - WCV
12
உடனே அரண்மனைக்கு இறங்கிச் சென்று, செயலரின் அறைக்குள் நுழைந்தார். அங்கே செயலராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்னாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் செதேக்கியா ஆகியோர் உள்படத் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
13
மக்கள் கேட்கும்படி ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டியிருந்த சொற்கள் எல்லாவற்றையும் மிக்காயா தலைவர்களிடம் எடுத்துரைத்தார்.
14
பின்னர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, கூசியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான எகுதியைப் பாரூக்கிடம் அனுப்பிவைத்தார்கள். “மக்கள் செவிகளில் விழும்படி நீ படித்துக் காட்டிய ஏட்டுச்சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டு வா”, என அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார்.
15
அப்பொழுது அவர்கள் அவரிடம், “நீ இங்கே அமர்ந்து, நாங்கள் கேட்கும்படி அதைப் படி” என்றார்கள். அவரும் அவர்கள் காதில் விழும்படி அதைப் படித்தார்.
16
எல்லாச் சொற்களையும் அவர்கள் கேட்டுத் திகிலுற்று, ஒருவர் ஒருவரை நோக்கினர். பின் பாரூக்கைப் பார்த்து, “இவற்றை எல்லாம் நாங்கள் கண்டிப்பாக அரசரிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்கள்.
17
தொடர்ந்து, “இச்சொற்கள் எல்லாவற்றையும் நீ எவ்வாறு எழுதினாய்? அவன் சொல்ல நீ எழுதினாயா? சொல்” என்று அவர்கள் பாரூக்கை வினவினார்கள்.
18
அதற்குப் பாரூக்கு, “எரேமியா சொல்லச் சொல்ல, இவற்றை எல்லாம் நான் மை கொண்டு ஏட்டுச்சுருளில் எழுதினேன்” என்று மறுமொழி கூறினார்.
19
அப்பொழுது தலைவர்கள் பாரூக்கை நோக்கி, “நீயும் எரேமியாவும் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதிருக்கட்டும்” என்றார்கள்.