14
திராட்சை இரசம் பருகவேண்டாம் என்று இரேக்காபின் மகன் யோனதாபு தம் வீட்டாருக்குக் கொடுத்திருந்த கட்டளை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுவரை அவர்கள் திராட்சை இரசம் பருகுவது கிடையாது. இவ்வாறு தங்கள் மூதாதையின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து வருகிறார்கள். நானோ உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
15
இறைவாக்கினரான என் ஊழியர் அனைவரையும் நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பி வைத்தேன். “இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்கள் தீய வழியினின்று திரும்பி வாருங்கள்: உங்கள் செயல்களைச் சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள். வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்று அவற்றை வழிபடாதீர்கள். அப்படியானால், உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்துள்ள நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்” என்று அவர்களைச் சொல்லவைத்தேன். நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை.
16
இரேக்காபின் மகனான யோனதாபின் மக்கள் தம் மூதாதையின் கட்டளையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இம்மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.