14
'உங்களிடம் அடிமைகளாய் விற்கப்பட்ட உங்கள் எபிரேய சகோதரர்கள் அனைவரும், ஆறு ஆண்டுகள் உங்களுக்குப் பணிவிடை புரிந்தபின், ஏழாம் ஆண்டின் முடிவில் அனைவரும் உங்களிடமிருந்து விடுதலை பெறவேண்டும்' என்று நான் அப்போது உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். உங்கள் மூதாதையரோ எனக்கு கீழ்ப்படியவில்லை: செவி சாய்க்கவுமில்லை.
15
ஆனால் நீங்கள் சற்றுமுன்பு மனம் வருந்தி, ஒவ்வோருவரும் தம் சகோதருக்கு விடுதலை கொடுத்ததன் மூலம் என் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்டீர்கள்: என் பெயர் விளங்கும் இல்லத்தில் என் திருமுன் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டீர்கள்.
16
ஆனால் உங்கள் மனத்தை நீங்கள் மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள்: என் பெயருக்குக் களங்கம் வருவித்தீர்கள்: தங்கள் விருப்பம்போல் செல்லும்படி நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை நீங்கள் மீண்டும் அடிமைப்படுத்திக் கொண்டீர்கள்.
17
எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை: உங்கள் சகோதரருக்கும் அடுத்திருப்பவருக்கும் விடுதலை அறிவிக்கவுமில்லை. ஆகவே வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவற்றால் அழிவதற்கான “விடுதலை”யை நான் உங்களுக்கு வழங்குவேன், என்கிறார் ஆண்டவர். உலக அரசுகள் அனைத்துக்கும் திகிலூட்டும் சின்னமாய் உன்னை மாற்றுவேன்.