எரேமியா 33:15-26 - WCV
15
அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்.
16
அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்: எருசலேம் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ” என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
17
ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத்தக்க ஒருவர் தாவீதுக்கு இராமல் போகார்.
18
என் திருமுன் எரிபலிகள் செலுத்தவும், தானியப் படையல்கள் ஒப்புக்கொடுக்கவும், என்றென்றும் பலிகள் நிறைவேற்றவும் தக்க ஒருவர் லேவி குலத்துக் குருக்களிடையே இராமல் போகார்.
19
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
20
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பகலும் இரவும் முறைப்படி வராதவாறு அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை உங்களால் உடைத்தெறியப்படுமாயின்,
21
என் ஊழியன் தாவீதோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் உடைத்தெறியப்படும், தாவீதின் அரியணையேறி ஆட்சிசெய்யும் மைந்தன் அவனுக்கு இருக்கமாட்டான்: என் பணியாளர்களான லேவி குலத்துக் குருக்களுக்கும் இவ்வாறே நிகழும்.
22
எண்ணமுடியாத விண்மீன்களையும் அளக்க முடியாத கடல் மணலையும் போல, என் ஊழியன் தாவீதின் வழி மரபினரையும் என் பணியாளரான லேவியரையும் நான் பெருகச் செய்வேன்.
23
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
24
ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும் அவர் தள்ளிவிட்டார் என்று இம்மக்கள் பேசிக்கொள்வரை நீ கவனித்ததில்லையா? என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு, என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்: அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை.
25
ஆண்டவர் கூறுவது இதுவே: நான் பகலோடும் இரவோடும் உடன்படிக்கை செய்திராவிடில், விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில்,
26
யாக்கோபின் வழிமரபினரையும், என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும் உண்மையாகவே தள்ளிவிடுவேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத் தாவீதின் வழிமரபினரிலிருந்து யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன். ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பேன்: அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்.