30
இஸ்ரயேல் மக்களும் தங்கள் இளமை முதல் எனது திருமுன் தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்: ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால் எனக்குச் சினமூட்டியதைத் தவிர, வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர்.
31
இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் இந்நாள்வரை, என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது. எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன்.
32
ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும் தங்களது எல்லாத் தீச்செயல்கள் மூலம் எனக்குச் சினமூட்டினார்கள்: அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள், எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே இவ்வாறு செய்துள்ளார்கள்.
33
அவர்கள் தங்களது முகத்தை அல்ல, முதுகையே எனக்குக் காட்டினார்கள். திரும்பத் திரும்ப நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தும் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவும் இல்லை, அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
34
எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி, தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர்.
35
மோலேக்கு தெய்வத்துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்தவன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை: இது என் எண்ணத்தில் கூட எழவில்லை.