1
“கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனை விட்டகன்று வேறு ஒருவனோடு வாழ்கையில், அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பிச் செல்வானா? அந்நாட்டு தீட்டுப்படுவது உறுதியல்லவா? நீ பல காதலர்களோடு விபசாரம் செய்தாய்: உன்னால் என்னிடம் திரும்பிவர முடியுமா?” என்கிறார் ஆண்டவர்.
2
உன் கண்களை உயர்த்தி மொட்டை மேடுகளைப்பார்: நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ? பாலை நிலத்தில் அராபியனைப்போல, பாதையோரங்களில் நீயும் காதலர்களுக்காகக் காத்திருந்தாய்: உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.
3
ஆகையால், நாட்டில் மழை பெய்யாது நின்று விட்டது: இளவேனிற் கால மழையும் வரவில்லை: உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி: நீ மானங்கெட்டவள்.
4
இப்போது கூட 'என் தந்தையே! என் இளமையின் நண்பரே!' என என்னை நீ அழைக்கவில்லையா?
5
'என்றென்றும் அவர் சினம் அடைவாரோ? இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ?' என்கிறாய். இவ்வாறு சொல்லிவிட்டு உன்னால் இயன்றவரை தீச்செயல்களையே செய்கிறாய்.
6
யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: “நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.
7
இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.
8
நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.
9
விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீடுப்படுத்தினாள்.