3
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன்.
4
அத்தோடு யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்திற்கு நான் திரும்பக் கொண்டு வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிவேன்', என்கிறார் ஆண்டவர்”.
5
அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் பேசினார்.
6
இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, “ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக!
7
ஆயினும் உம்செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும் விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்துக் கேளும்.
8
உமக்கும் எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவைப்பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர்.
9
நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும் பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது தெரியவரும்” என்றார்.