எரேமியா 27:16-22 - WCV
16
பின்னர் குருக்களிடமும் மக்கள் எல்லாரிடமும் நான் சொன்னது: “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'இதோ! ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் இப்பொழுதே பாபிலோனிலிருந்து திருப்பிக் கொணரப்படும்', என்று உங்களுக்கு அறிவிக்கும் இறைவாக்கினர்களின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.
17
எனவே அவர்களுக்குச் செவி கொடாதீர்கள். பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிந்தால் நீங்கள் பிழைப்பீர்கள். இந்நகர் ஏன் பாழாக வேண்டும்?
18
அவர்கள் உண்மையாகவே இறைவாக்கினர்களாய் இருந்தால், ஆண்டவரின் வாக்கும் அவர்களோடு இருந்தால், ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனது அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்களாவது பாபிலோனுக்குப் போகாதவாறு இப்பொழுதே அவர்கள் படைகளின் ஆண்டவரிடம் பரிந்து பேசட்டும்.”
19
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்துவந்த உயர்குடி மக்கள் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திய பொழுது, தன்னோடு எடுத்துச் செல்லாமல் இந்நகரிலேயே விட்டுச்சென்றிருந்த தூண்கள்,
20
வெண்கலக்கடல், ஆதாரங்கள், பிற கலங்கள் முதலியவற்றைக் குறித்துப் படைகளின் ஆண்டவர் கூறுவது:
21
ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்கள் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
22
'அவை யாவும் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும். நான் அவற்றின்மீது எனது கவனத்தைத் திருப்பும்வரை அவை அங்கேயே இருக்கும். பின்னர் நான் அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து இவ்விடத்தில் வைக்கச் செய்வேன்' என்கிறார் ஆண்டவர்.