எரேமியா 26:11-24 - WCV
11
குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்: ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று முறையிட்டனர்.
12
அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: “நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார்.
13
எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார்.
14
இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள்.
15
ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்: என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும், இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.”
16
பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, “கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்: ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்” என்றார்கள்.
17
உடனே நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து, மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:
18
“யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார். அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி, 'படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்: எருசலேம் பாழடைந்து மண்மேடாக மாறும். கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,' என்று சொன்னார்.
19
இதற்காக யூதாவின் அரசரான எசேக்கியாவும் யூதா நாடு முழுவதும் அவரைக் கொன்று போட்டார்களா? எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா? இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா? நாமோ நமக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் போகிறோம்.
20
ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்: அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன் உரியா ஆவார். அவரும் எரேமியாவைப் போலவே இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்திருந்தார்.
21
யோயாக்கிம் அரசரும் அவருடைய படைவீரர்களும் தலைவர்கள் அனைவரும் உரியா சொன்னதைக் கேட்டனர். உடனே அரசர் அவரைக் கொல்ல முயன்றார். ஆனால் உரியா அதை அறிந்து அச்சமுற்று எகிப்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.
22
அரசர் யோயாக்கிமோ அக்போரின் மகன் எல்னாத்தானையும், அவனோடு சில ஆள்களையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.
23
அவர்கள் எகிப்திலிருந்து உரியாவை இழுத்து வந்து, அரசர் யோயாக்கிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அரசரோ அவரை வாளுக்கு இரையாக்கி, அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார்.”
24
ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.