3
ஆமோனின் மகனும் யூதாவின் அரசனுமான யோசியா ஆட்சியேற்ற பதின்மூன்றாம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டு வந்துள்ளது. நானும் அதை உங்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். நீங்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை.
4
ஆண்டவர்தம் ஊழியர்களான இறைவாக்கினர் எல்லாரையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார். நீங்களோ காது கொடுத்துக் கேட்கவில்லை: கவனிக்கவுமில்லை.
5
அவரது செய்தி இதுவே: “நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்தம் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகுங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் எக்காலத்திற்குமெனக் கொடுத்துள்ள நாட்டில் வாழ்வீர்கள்.
6
வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளால் எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால், நான் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன்.
7
நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர். உங்கள் கை வேலைப்பாடுகளால் உங்களுக்கே தீங்கிழைக்கும் வகையில் எனக்குச் சினமூட்டினீர்கள்.