1
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், அதாவது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற முதல் ஆண்டில், யூதா மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.
2
அதனை இறைவாக்கினரான எரேமியா யூதாவின் அனைத்து மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்போர் யாவருக்கும் எடுத்துரைத்தார்:
3
ஆமோனின் மகனும் யூதாவின் அரசனுமான யோசியா ஆட்சியேற்ற பதின்மூன்றாம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டு வந்துள்ளது. நானும் அதை உங்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். நீங்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை.