9
இறைவாக்கினரைக் குறித்து: என்னுள் என் இதயம் நொறுங்கியுள்ளது: என் எலும்புகள் எல்லாம் நடுநடுங்குகின்றன: ஆண்டவரை முன்னிட்டும் அவர்தம் புனித சொற்களை முன்னிட்டும் நான் குடிபோதையில் இருப்பவன் போல் ஆனேன்: மதுவினால் மயக்கம் கொண்டவன் ஆனேன்.
10
ஏனெனில் நாட்டில் விபசாரர்கள் நிரம்பியுள்ளனர்: சாபத்தின் விளைவாக நாடு புலம்புகிறது: பாலைநிலத்துப் பசும்புல் தரை உலர்ந்து போயிற்று: அவர்கள் வழிகள் தீயவை: அவர்கள் ஆற்றல் தீயவற்றிற்குப் பயன்படுகின்றது.
11
இறைவாக்கினர், குருக்கள் ஆகிய இரு சாராரும் இறையுணர்வு அற்றவர்கள்: என் இல்லத்தில் அவர்களின் தீச்செயல்களை நான் கண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
12
எனவே, அவர்கள் பாதை வழுக்கிவிடக்கூடியது: இருளில் அவர்கள் தள்ளப்பட்டுத் தடுக்கி விழுவர்: அவர்கள் தண்டிக்கப்படும் ஆண்டில் அவர்கள்மேல் தீமை வரச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.
13
சமாரியாவின் இறைவாக்கினரிடையே ஒவ்வாத செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் பாகால் பெயரால் பொய் வாக்குரைத்து என் மக்கள் இஸ்ரயேலைத் தவறான வழியில் நடத்தினார்கள்.
14
எருசலேமின் இறைவாக்கினரிடையே திகிலூட்டும் செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்: பொய்ம்மை வழியில் நடக்கிறார்கள்: தீயோரின் கைகளை வலுப்படுத்துகிறார்கள்: இதனால் யாரும் தம் தீய வழியிலிருந்து திரும்புவதில்லை: அவர்கள் எல்லாரும் என் பார்வையில் சோதோமைப் போன்றவர்கள்: எருசலேமின் குடிமக்கள் கொமோராவைப் போன்றவர்கள்.
15
எனவே இறைவாக்கினரைப் பற்றிப் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களை எட்டிக்காய் உண்ணச் செய்வேன்: நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன். ஏனெனில், எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே இறைஉணர்வின்மை நாடெங்கும் பரவிற்று.