25
என் பெயரால் பொய்யுரைக்கும் இறைவாக்கினர் “நான் கனவுகண்டேன், நான் கனவுகண்டேன்” என்று கூறியதைக் கேட்டேன்.
26
பொய்யையும், தம் வஞ்சக எண்ணங்களையும் இறைவாக்காக உரைக்கும் இந்த இறைவாக்கினரின் மனப்பாங்கு என்று மாறுமோ?
27
இவர்களுடைய மூதாதையர் பாகால் காரணமாக என் பெயரை மறந்தனர். அதுபோலத் தாங்கள் ஒருவர் ஒருவருக்குக் கூறும் கனவுகள் வழியாக என் மக்களின் நினைவிலிருந்து என் பெயரை அகற்றிவிடலாம் என நினைக்கின்றனர்.
28
கனவு கண்ட இறைவாக்கினன் தன் கனவை எடுத்துச் சொல்லட்டும். என் சொல்லைத் தன்னிடத்தில் கொண்டிருப்பவனோ அதனை உண்மையோடு எடுத்துரைக்கட்டும். தாளைத் தானியத்தோடு ஒப்பிட முடியுமா? என்கிறார் ஆண்டவர்.
29
என் சொல் தீயைப் போன்றது அல்லவா? பாதையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது அல்லவா? என்கிறார் ஆண்டவர்.
30
ஆகவே, ஒருவர் ஒருவரிடமிருந்து என் சொற்களைத் திருடும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
31
தங்கள் நாவினால் “ஆண்டவர் கூறுகிறார்” என்று உரைக்கும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
32
பொய்க் கனவுகனை இறைவாக்காக உரைப்போருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். இவர்கள் அவற்றை எடுத்துரைத்து, தங்கள் பொய்களாலும் மூடச்செயல்களாலும் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை: அவர்களுக்குக் கட்டளையிடவும் இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என்கிறார் ஆண்டவர்.