எரேமியா 23:11-21 - WCV
11
இறைவாக்கினர், குருக்கள் ஆகிய இரு சாராரும் இறையுணர்வு அற்றவர்கள்: என் இல்லத்தில் அவர்களின் தீச்செயல்களை நான் கண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
12
எனவே, அவர்கள் பாதை வழுக்கிவிடக்கூடியது: இருளில் அவர்கள் தள்ளப்பட்டுத் தடுக்கி விழுவர்: அவர்கள் தண்டிக்கப்படும் ஆண்டில் அவர்கள்மேல் தீமை வரச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.
13
சமாரியாவின் இறைவாக்கினரிடையே ஒவ்வாத செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் பாகால் பெயரால் பொய் வாக்குரைத்து என் மக்கள் இஸ்ரயேலைத் தவறான வழியில் நடத்தினார்கள்.
14
எருசலேமின் இறைவாக்கினரிடையே திகிலூட்டும் செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்: பொய்ம்மை வழியில் நடக்கிறார்கள்: தீயோரின் கைகளை வலுப்படுத்துகிறார்கள்: இதனால் யாரும் தம் தீய வழியிலிருந்து திரும்புவதில்லை: அவர்கள் எல்லாரும் என் பார்வையில் சோதோமைப் போன்றவர்கள்: எருசலேமின் குடிமக்கள் கொமோராவைப் போன்றவர்கள்.
15
எனவே இறைவாக்கினரைப் பற்றிப் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களை எட்டிக்காய் உண்ணச் செய்வேன்: நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன். ஏனெனில், எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே இறைஉணர்வின்மை நாடெங்கும் பரவிற்று.
16
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும் இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச் செவி கொடுக்காதீர்கள். அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று: மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே.
17
ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம் “உங்களுக்கு நலம் உண்டாகும்” எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும் “உங்களுக்குத் தீமை நேராது” என்று கூறுகிறார்கள்.
18
ஆண்டவரின் மன்றத்தில் நின்றவன் யார்? அவர் சொல்லைக் கண்டவன் அல்லது கேட்டவன் யார்? அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து அதனை அறிவித்தவன் யார்?
19
இதோ ஆண்டவரின் சீற்றம் புயலாய் வீசுகின்றது: அது தீயோரின் தலைமேல் சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது.
20
ஆண்டவர் தம் இதயத்தின் திட்டங்களைச் செயலாக்கி நிறைவேற்றும்வரை அவர் சினம் தணியாது: வரப்போகும் நாள்களில் இதனை நீங்கள் முற்றிலும் அறிந்துகொள்வீர்கள்.
21
அந்த இறைவாக்கினர்களை நான் அனுப்பவில்லை: அவர்களாகவே ஓடிவந்தார்கள். நான் அவர்களோடு பேசவில்லை: அவர்களாகவே இறைவாக்கு உரைத்தார்கள்.