1
இம்மேர் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு, எரேமியா இவற்றை எல்லாம் இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்.
2
அதன் காரணமாக அவன் எரேமியாவைப் பிடித்து, அடித்து, ஆண்டவர் இல்லத்தில் பென்யமின் உயர்வாயிலில் சிறையில் அடைத்தான்.
3
மறுநாள் காலையில் பஸ்கூர் எரேமியாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அப்போது எரேமியா கூறியது: “ஆண்டவர் உன்னைப் பஸ்கூர் என்றல்ல, மாறாக 'மாகோர் மிசாபீபு' என்றே அழைத்துள்ளார்.
4
ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ உனக்கும் உன் நண்பர்களுக்கும் பேரச்சம் உண்டாக நீயே காரணமாவாய். உன் கண் முன்னாலேயே அவர்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள். யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்: அவன் அவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான்.
5
இந்நகரின் செல்வங்களையும் உழைப்பின் பயன் அனைத்தையும் விலை உயர்ந்த பொருள்கள் யாவற்றையும் யூதா அரசரின் கருவூலங்களையும் அவர்கள் பகைவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பாபிலோனுக்கே கொண்டு செல்வார்கள்.
6
பஸ்கூர்! நீயும் உன் வீட்டில் வாழும் அனைவரும் நாடு கடத்தப்படுவீர்கள். நீயும், உன் பொய்யான இறைவாக்குகளைக் கேட்ட உன் நண்பர்களும் பாபிலோனுக்குச் சென்று அங்குச் சாவீர்கள்: அங்கேயே புதைக்கப்படுவீர்கள்.