10
சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்: கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்: இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.
11
தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா? என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.
12
வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்: அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.
13
ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்: தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.
14
இஸ்ரயேல் ஓர் அடிமையா? வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா? அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?
15
அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன: அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன: அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.
16
மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர்.
17
உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?
18
நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன? யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன?
19
உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்: உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்: உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
20
நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்: உன் தளைகளை அறுத்துவிட்டாய்: “நான் ஊழியம் செய்வேன்” என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே!
21
முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்: நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி?
22
நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.
23
“நான் தீட்டுப்படவில்லை: பாகால்களுக்குப்பின் திரியவில்லை” என எப்படி நீ கூற முடியும்? பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்: நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்: இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.
24
பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும்? அதனை வருந்தித் தேடத் தேவையில்லை: புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.
25
“கால் தேய ஓடாதே: தொண்டை வறண்டுபோக விடாதே” என்றால், நீயோ, “பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்: அவர்கள் பின்னே திரிவேன்” என்றாய்.
26
திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.
27
ஒரு மரத்தை நோக்கி, “நீயே என் தந்தை” என்பர்: ஒரு கல்லை நோக்கி, “நீயே என்னைப் பெற்றெடுத்தவள்” என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்: ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், “எழுந்தருளி எங்களை விடுவியும்” என்பர்.
28
உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே? உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே! யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே!