1
ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ சென்று குயவன் செய்த மண்கலயம் ஒன்றை வாங்கு. மக்களுள் மூப்பர் சிலரையும் குருக்களுள் முதியோர் சிலரையும் கூட்டிக் கொண்டு,
2
மண்கல உடைசல் வாயில் அருகிலுள்ள பென்இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கு நான் உன்னிடம் சொல்லப்போகும் சொற்களை அறிவி.
3
நீ சொல்ல வேண்டியது: “யூதாவின் அரசர்களே, எருசலேம் வாழ் மக்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: கேட்போர் ஒவ்வொருவரின் காதுகள் நடு நடுங்கும் அளவுக்கு இந்த இடத்தின் மீது தீமை வரச் செய்வேன்.
4
அவர்கள் என்னைப் புறக்கணித்தனர்: இந்த இடத்தைத் தீட்டுப்படுத்தினர். தாங்களோ, தங்கள் மூதாதையரோ, யூதாவின் அரசர்களோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். மாசற்றோரின் இரத்தத்தால் இவ்விடத்தை நிரப்பினர்.
5
தங்கள் புதல்வர்களைத் தீயில் சுட்டெரித்துப் பாகாலுக்கு எரிபலி கொடுக்கும்படி, அந்தத் தெய்வத்திற்குத் தொழுகை மேடு எழுப்பினர். இதனை நான் கட்டளையிடவில்லை: இதுபற்றி நான் பேசவுமில்லை: இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.
6
ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாள்கள் வருகின்றன! அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது. மாறாகப் “படுகொலைப் பள்ளத்தாக்கு” என்று பெயர் பெறும்.
7
யூதா, எருசலேமின் திட்டங்களை நான் இவ்விடத்தில் முறியடிப்பேன். அவர்கள் பகைவர் முன்னிலையிலும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னிலையிலும் அவர்களை வாளால் வீழ்த்துவேன். அவர்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.