2
“நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.”
3
எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
4
குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.
5
அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு:
6
“இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
7
ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம்.
8
எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன்.
9
அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம்.
10
மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன்.
11
ஆகையால் இப்போது நீ யூதா நாட்டினரையும் எருசலேம் வாழ் மக்களையும் நோக்கிக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு எதிராய் வரப்போகும் தீமைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகிறேன்: ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய வழியிலிருந்து திரும்புங்கள்: உங்கள் வழிகளையும் செயல்களையும் திருத்திக்கொள்ளுங்கள்.”
12
அவர்களோ, “இதெல்லாம் சொல்லிப் பயனில்லை. எங்கள் திட்டப்படியே நாங்கள் நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இதயத்தின் பிடிவாதப்படியே செயல்படுவோம்” என்பார்கள்.