எரேமியா 17:21-27 - WCV
21
ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம்: அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.
22
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடியுங்கள்.
23
அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை: நான் சொன்னதைக் கவனிக்கவில்லை: கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர்.
24
ஆண்டவர் கூறுவது: நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிபபீர்களாகில்,
25
தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்: குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.
26
அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள்.
27
ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்: அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லக் கூடாது: எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்: அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்: அத்தீயோ அணையாது.