10
நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை: கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் உன்னைச் சபிக்கிறார்கள்.
11
ஆண்டவரே, நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால், எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில் நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால், அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும்.
12
வடக்கிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்?
13
“நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன்.
14
முன்பின் தெரியாத ஒரு நாட்டில் எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்: ஏனெனில் என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது. அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்.”
15
ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்: நீர் என்னை அறிவீர்: என்னை நினைவுகூரும்: எனக்கு உதவியருளும்: என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டுப் பழிவாங்கும்: நீர் பொறுமையுள்ளவர்: என்னைத் தள்ளிவிடாதேயும்: உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்பதை நினைவில் கொள்ளும்.
16
நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்: அவற்றை உட்கொண்டேன்: உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன: என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.
17
களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.
18
எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!
19
எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்: பயனில் நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்: நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.
20
நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்: அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்: ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்: ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
21
தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்: முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.”