1
ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.”
2
ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.
3
எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது:
4
“நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.”
5
ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன்.
6
பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.”
7
அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.
8
அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
9
“ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.
10
என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.
11
கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டால் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர்.
12
நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,” அவர்களோ “சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?” என்று உன்னிடம் கூறுவார்கள்.
13
அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.
14
அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.