ஏசாயா 7:17-25 - WCV
17
எப்ராயிம் யூதாவை விட்டுப் பிரிந்துபோன பின் இந்நாள்வரை வராத நாள்களை உம்மேலும். உம்நாட்டு மக்கள் மேலும், உம் தந்தையரின் குடும்பத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் வரச் செய்வார். அசீரிய அரசனையே வரவழைப்பார்.
18
அந்நாளில், எகிப்து ஆறுகளின் ஊற்று முனையிலுள்ள ஈயையும், அசீரிய நாட்டிலுள்ள தேனீயையும் ஆண்டவர் சீழ்க்கையொலி செய்து அழைப்பார்:
19
உடனே அவை அனைத்தும் கூட்டமாய் வந்து, செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள், கற்பாறைக் குகைள், முட்புதர், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தின்மேலும் வந்திறங்கும்.
20
அந்நாளில் ஆணடவர் பேராற்றின் மறு பக்கத்திலிருந்து, அசீரிய அரசன் என்ற சவரக்கத்தியை வாடகைக்கு எடுப்பார்: அக்கத்தியினால் உங்கள் தலையிலும் காலிலும் உள்ள முடியை மழித்து விடுவார்: அது உங்கள் தாடியைக்கூட சிரைத்துப்போடும்.
21
அந்நாளில், இளம்பசு ஒன்றையும் ஆடுகள் இரண்டையும் ஒருவன் வளர்த்து வருவான்.
22
அவை மிகுதியாகப்பால் தருவதனால் அவன் வெண்ணெய் உண்பான்: நாட்டில் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும், வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவர்.
23
அந்நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு விலைமதிப்புள்ள ஆயிரம் திராட்சைச் செடிகள் வளாந்த நிலம் முழுவதிலும் நெருஞ்சி முள்ளும் முட்புதரும் முளைத்திருக்கும்.
24
நாடெங்கும் நெருஞ்சி முள்ளும், முட்புதரும் நிறைந்திருப்பதால், வில்லோடும் அம்போடுமே மனிதர்கள் வருவார்கள்.
25
மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டு வந்த மலைகளில் நெருஞ்சி முள்ளும் முட்புதருமே இருப்பதால் அதற்கு அஞ்சி எவருமே அங்கே வரார். அவை, மாடுகள் ஓட்டிவிடப்படும் மேட்டு நிலமாகும்: ஆடுகள் நடமாடும் காடாகும்.