3
அவர்களுக்கு இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும் மனிதரைக் கொலைச்செய்வதும் ஒன்றாம்: ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கொடுப்பதும் நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்: உணவுப் படையலைப் படைப்பதும், பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்: நினைவுப் படையலாகிய தூபம் காட்டுதலைச் செய்வதும் சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்: அவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்தெடுத்துள்ளனர்: தங்கள் அருவருப்புகள் மீது அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது.
4
நானும் அவர்களுக்குரிய தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்: அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மீது வரச்செய்வேன்: ஏனெனில், நான் அழைத்தபோது எவரும் பதில் தரவில்லை: நான் பேசியபோது அவர்கள் செவி கொடுக்கவில்லை: என் கண்முன்னே தீயவற்றைச் செய்தார்கள்: நான் விருப்பாதவற்றைத் தெரிந்தெடுத்தார்கள்.
5
ஆண்டவரின் வாக்குக்கு நடுநடுங்குவோரே, இதைக் கேளுங்கள்: என் பெயர் பொருட்டு உங்களை வெறுத்து ஒதுக்கும் உங்கள் உறவின் முறையார் “நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் காணும் பொருட்டு ஆண்டவர் தம் மாட்சியைக் காண்பிக்கட்டும்” என்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் வெட்கம் அடைவார்கள்.
6
இதோ, நகரில் பேரொலி கேட்கின்றது! திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது! ஆண்டவர் தம் பகைவருக்குத் தக்க பதலடி கொடுப்பதால் எழும் இரைச்சலே அது!