ஏசாயா 63:1-7 - WCV
1
ஏதோமிலிருந்து வருகின்ற இவர் யார்? கருஞ்சிவப்பு உடை உடுத்திப் பொட்சராவிலிருந்து வரும் இவர் யார்? அழகுமிகு ஆடை அணிந்து பேராற்றலுடன் பீடுநடைபோடும் இவர் யார்? நானேதான் அவர்! வெற்றியை பறைசாற்றுபவர்: விடுதலை வழங்குவதில் திறன்மிக்கவர்.
2
உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்? உம் உடைகள் திராட்சை பிழியும் ஆலையில் மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்?
3
தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்: மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை: என் கோபத்தில் நான் அவர்களை மிதித்தேன்: என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்: அவர்கள் செந்நீர் என் உடைகள் மேல் தெறிந்தது: என் ஆடைகள் அனைத்தையும் கறையாக்கினேன்.
4
நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள் என் நெஞ்சத்தில் இருந்தது: மீட்பின் ஆண்டு வந்துவிட்டது.
5
சுற்றுமுற்றும் பார்த்தேன்: துணைபுரிவோர் எவருமில்லை: திகைப்புற்று நின்றேன்: தாங்குவார் யாருமில்லை: என் புயமே எனக்கு வெற்றி கொணர்ந்தது: என் சினமே எனக்கு ஊக்கமளித்தது.
6
சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்: சீற்றமடைந்து அவர்களைக் குடிவெறி கொள்ளச்செய்தேன்: அவர்கள் குருதியைத் தரையில் கொட்டினேன்.
7
ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்: ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்: தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.