9
தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்: இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்: ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார்.
10
அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்: அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்: ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்: நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.
11
உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்: இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்: பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும், அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும், அவை திறந்திருக்கும்.
12
உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்: அவை முற்றிலும் பாழடைந்து போகும்.