1
எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!
2
இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்!
3
பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்: மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
4
உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.
5
அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்: கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்: பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.
6
ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
7
கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்: நெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்: எனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்: இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன்.
8
மேகங்கள் போலும் பலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும் விரைந்து செல்லும் இவர்கள் யார்?
9
தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்: இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்: ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார்.