2
உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன: உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.
3
உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன: உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன: உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.
4
நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை: உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை: வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பொய்யைப் பேசி, வஞ்சனையைக் கருத்தரித்துத் தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.
5
நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்: சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்: அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்: உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.
6
அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா: அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்: அவர்களின் செயல்கள் தீயின: அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!
7
தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன: குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்: அவர்கள் எண்ணங்கள் தீயவை: பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.
8
அமைதி வழியை அவர்கள் அறியார்: நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை: தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்: அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.
9
ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது: நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை. ஒளிக்கெனக் காத்திருந்தோம்: காரிருள்தான் கிட்டியது: விடியலை எதிர்பார்த்தோம்: இருளிலேயே நடக்கின்றோம்:
10
பார்வையற்றோரைப் போல் சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்: கண்ணில்லாதவரைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்: நண்பகலிலும் மங்கிய பொழுதிலும் செத்தவர்போல் இருக்கின்றோம்.
11
கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்: புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்: நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம், ஒன்றையும் காணவில்லை: விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.
12
உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன: எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன: எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன: எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.
13
ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவரை வஞ்சித்தோம்: எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்: ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்பற்றிப் பேசினோம்: பொய்யானவற்றை மனதில் உருவாக்கி அவற்றை மொழிந்தோம்.