ஏசாயா 59:15-21 - WCV
15
உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது: தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்: ஆண்டவர் அதைக் கண்டார்: அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.
16
இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்: அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து: அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது.
17
அவர் நேர்மையை மார்புக் கவசமாய் அணிந்துகொண்டார்: விடுதலையைத் தலைச்சீராவாய்த் தம் தலையில் வைத்துக்கொண்டார்: அநீதிக்குப் பழிவாங்குதலை ஆடையாய் உடுத்திக் கொண்டார்: அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டார்.
18
தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்: அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்: தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்: தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.
19
மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்: கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்: ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர, ஓடிவரும் ஆறென அவர் வருவார்.
20
சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்: யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்.
21
அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.